தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 டன்னாக உயர்த்த வேண்டும் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியிடம் தொலைபேசியில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Update: 2021-05-09 05:36 GMT
சென்னை, 

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை கோரினார்.

இதுதொடர்பாக, மத்திய அரசுக்கு தமிழக அரசும் துணை நிற்கும் என உறுதியளித்தார். தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக உறுதியளித்த பிரதமர் நரேந்திரமோடி, கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிப்பதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்