பிரதமர் கிசான் திட்டத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை: மீண்டும் உழவர் சந்தை திட்டம் செயல்படுத்தப்படும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி தமிழகம் முழுவதும் உழவர் சந்தை திட்டம் மீண்டும் முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

Update: 2021-05-10 22:48 GMT
சென்னை, 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் வேளாண்மைத் துறையில் அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, நேற்று முதல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வேளாண்மைத்துறையில் இதுவரை நடைபெற்ற பணிகளையும், இந்த துறையின் கட்டமைப்பையும் நேரடியாக ஆய்வு செய்து விளக்கம் கேட்டேன்.

பிரதமர் கிசான் திட்டத்தில் சில பகுதிகளில் தவறுகள் நடைபெற்றது கண்டறியப்பட்டுள்ளது. 114 பேர் மீது குற்ற வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்த தொகைகள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்கக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம். தவறு நடக்காமல் இருக்க சில மாற்று வழிகளை ஆய்வு செய்து அது நடைமுறைப்படுத்தப்படும். இந்த ஆட்சியில் அந்த தவறுகள் நடைபெறாது.

கிசான் திட்டத்தில் பல மாவட்டங்களில், பல கிராமங்களில் தவறு செய்ததற்கு காரணம், மத்திய அரசு அறிவித்ததில் சில வாய்ப்புகள் இருந்ததை அவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள். இப்போது துறையின் அதிகாரிகள், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். தவறு செய்தவர்கள் மீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கண்டிப்பாக தவறு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும். கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் இனி நடைபெறாது. நடக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

உழவர் சந்தை திட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில், தமிழகம் முழுவதும் உழவர் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. அவர் ஆரம்பித்து வந்த திட்டம் சில இடங்களில் முடக்கப்பட்டு உள்ளது. மேலும், எங்கெங்கு தேவைகள் ஏற்படும் என்பதை அறிந்து அந்த இடங்களில் உழவர் சந்தை ஆரம்பிக்கப்படும். அது மட்டுமல்லாமல், அதற்குரிய காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

எந்தெந்த இடங்களில், பகுதிகளில் உழவர் சந்தைகளை திறக்கலாம் என்பதை அறிந்து நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறோம். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி தமிழகம் முழுவதும் உழவர் சந்தை திட்டம் மீண்டும் முழு அளவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மைத் துறைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சொன்னதை செய்வார்கள் என்று மக்களுடைய எதிர்பார்ப்பும் எங்கள் மீது அதிகமாக உள்ளது. அதுபோல் அறிவிக்கப்பட்ட அனைத்தும் நிறைவேற்றப்படும். வேளாண்மை துறைக்கான புதிய திட்டங்கள் கண்டிப்பாக நடக்கும்.

நீராவும், கள்ளும்...

இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துவது குறித்தும் அதிகாரிகளிடம் பேசப்பட்டுள்ளது. வரும் பட்ஜெட் அறிக்கையில் அந்த அறிவிப்புகள் வெளியாகும். தக்காளி பொறுத்தவரை ஆண்டு முழுவதும பயிர் செய்கிறார்கள். இதனால் விலை ஏற்றம், இறக்கம் இருக்கிறது. ஆனாலும், விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும். கூடுதல் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.

நீரா பானம், பனை மரத்தில் இருந்து வரும் கள் என்பதில் வித்தியாசம் உள்ளது. மக்கள் எதிர்க்கும் எந்த திட்டத்தையும் இந்த அரசு ஏற்றுக்கொள்ளாது. முதல்-அமைச்சரிடம் அதுபற்றி கலந்து பேசிதான் முடிவு செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்