தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில், தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.

Update: 2021-05-11 02:47 GMT
சென்னை,

தமிழகத்தில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றபோது, அப்போதைய அமைச்சரவையில் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் தோல்வி அடைந்தனர். என்றாலும், அ.தி.மு.க.வே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில், அதே ஆண்டு ஜூன் மாதம் மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெற்றது. இதில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக ஆர்.வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டார். அவர் வெற்றி பெற்றதை தொடர்ந்து, 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி முதல் மாநிலங்களவை எம்.பி.யாக அவர் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் 2022-ம் ஆண்டு ஜூன் 29-ந்தேதியுடன் முடிவடைகிறது.

ராஜினாமா

இதேபோல், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந்தேதி கே.பி.முனுசாமி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் 2026-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதியுடன் நிறைவடைகிறது. தற்போதைய நிலையில், ஆர்.வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் முடிய ஒரு ஆண்டும், கே.பி.முனுசாமியின் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகளும் உள்ளன.

இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியில் இருந்தும், ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் இருந்தும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இருவரும் எம்.எல்.ஏ.க்களாக இன்று (செவ்வாய்க்கிழமை) பொறுப்பேற்க உள்ள நிலையில், எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு

ஏற்கனவே, அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் மரணம் அடைந்தார். அவர் 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற நிலையில், அவரது பதவிக்காலமும் இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது. எனவே, தற்போதைய நிலையில் 3 மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளது.

இந்த பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தற்போதைய நிலையில், தமிழக சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் பலத்தை பார்த்தால், தி.மு.க. கூட்டணி 159, அ.தி.மு.க. கூட்டணி 75 என்ற அளவில் உள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால், 3 எம்.பி.க்கள் இடங்களிலும் தி.மு.க.வே வெற்றிபெற அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் செய்திகள்