பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு

‘‘மத்திய அரசின் ‘நிர்பயா’ திட்டத்தின்கீழ் பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும்’’, என அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-05-14 00:55 GMT
சென்னை, 

அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது.

மாநகர் போக்குவரத்துக்கழக, தலைமையக, கலந்தாய்வு கூடத்தில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

பெண்கள் வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பொறுப்பேற்ற உடனே டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டார். தமிழ்நாடு அரசு அனைத்து போக்குவரத்து கழகத்தின் 6 ஆயிரத்து 628 நகர்புற பஸ்களிலும் மறுநாளே (கடந்த 8-ந்தேதி) இந்த அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இத்திட்டமானது, பணிபுரியும் பெண்கள் மற்றும் உயர் கல்வி படிக்கும் மகளிர் உள்ளிட்ட அனைத்து பெண்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில், தற்போது 1,400 சாதாரண கட்டண பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படும். குறிப்பாக, திருநங்கைகள் பயன்பெறும் வகையில் முதல்-அமைச்சருடன் கலந்து பேசி ஆவன செய்யப்படும்.

கடும் நிதி நெருக்கடி

கடந்த ஆட்சிக்காலங்களில் முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தினால், தொடர்ந்து போக்குவரத்துக்கழகங்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதுபோன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விரைவில் உறுதியானத் தீர்வு காணப்படும்.

குறிப்பாக, டிரைவர்களுக்கு சீரிய முறையில் தரமான பயிற்சிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற சிறப்பு கூட்டங்களும், நலன்களை பாதுகாக்கின்ற வகையில், மருத்துவ முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். போக்குவரத்துக்கழகங்களின் பணிகளை மேம்படுத்தும் வகையில் திறம்பட பணியாற்றி, பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்து சேவை வழங்குவதிலும், பணியாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு, துறைக்கும், இந்த அரசுக்கும் பெருமை சேர்த்திட அர்ப்பணிப்புடன் பணியாற்றிட வேண்டும்.

பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள்

மேலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள, அனைத்து போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் அனைத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அனைவரும் பயன் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பஸ்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில், மத்திய அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள ‘நிர்பயா’ திட்டத்தின் வாயிலாக, அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல், பொதுமக்கள் தங்கள் செல்போன் வழியாக பஸ்களின் வழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள, ‘சலோ ஆப்’ செயலியை விரைந்து செயல்படுத்த வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.

ஆக்சிஜன் வசதி பஸ்கள்

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஒரு சில மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்திலும் கொரோனா நோயாளிகளுக்காக பஸ்களில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளித்திட ஏற்பாடு செய்யப்படுமா?

பதில்:- இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரிடம் கலந்தாலோசித்து ஆவண செய்வதற்கு போக்குவரத்துத்துறை தயாராக உள்ளது.

கேள்வி:- நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து, சென்னையில் சாதாரண கட்டண பஸ்கள் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறதா?

பதில்:- இந்த வகை பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பல வழித்தடங்களில் விரைவில் விரிவுபடுத்துவது குறித்து பரிசீலனையில் உள்ளது. முழு ஊரடங்கு முடிந்த பின்பு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல தற்போதைய சூழலில் தேவைக்கேற்ப முன்கள பணியாளர்களுக்காக கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்