தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: போலீசார் தீவிர கண்காணிப்பு

ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக சாலைகளில் காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்களின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

Update: 2021-05-15 09:50 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள்உச்சம் அடைந்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 10-ந் தேதி முதல் வருகிற 24-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் அதையும் மீறி ஏராளமானோர் வாகனங்களில் வெளியில் சுற்றி வருகிறார்கள்.

இதை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. நேற்று வரை மதியம் 12 மணி வரை திறக்கப்பட்டிருந்த கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் காலை 10 மணிக்கு அடைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்ட கடைகள் 10 மணிக்கு அடைக்கப்பட்டன. காலை 9.55 மணிக்கே போலீசார் ரோந்து சென்று கடைகளை அடைக்குமாறு அறிவுறுத்தி சென்றனர். அதன்படி ஒவ்வொரு கடைக்காரர்களும் காலை 10 மணிக்கு கடைகளை மூடி விட்டனர். இன்று முதல் டீக்கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் தெருக்களில் மக்கள் கூட்டம் குறைந்து இருந்தது.

தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இதில் சென்னை நகரத்தில் மட்டும் 500 இடங்களில் அதிரடியாக வாகன சோதனை நடத்தப்பட்டது. தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் இன்று கடுமையாக எச்சரித்தனர். 
ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக சாலைகளில் காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்களின் கூட்டம் வெகுவாக குறைந்திருந்தது.

மேலும் செய்திகள்