பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்கள் அதிகம்: தமிழகத்தில் 27,936 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 27,936 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-06-01 02:27 GMT
சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து 4-வது நாளாக நேற்று பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,53,264 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15,766 ஆண்கள், 12,170 பெண்கள் என மொத்தம் 27 ஆயிரத்து 936 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 897 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4,210 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கோவையில் 3,488 பேரும், சென்னையில் 2,596 பேரும், ஈரோட்டில் 1,742 பேரும், திருப்பூரில் 1,373 பேரும், செங்கல்பட்டில் 1,138 பேரும், சேலத்தில் 1,157 பேரும், திருச்சியில் 1,119 பேரும், நாமக்கலில் 983 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 224 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 70 லட்சத்து 47 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 12 லட்சத்து 36 ஆயிரத்து 167 ஆண்களும், 8 லட்சத்து 60 ஆயிரத்து 311 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 20 லட்சத்து 96 ஆயிரத்து 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட 75 ஆயிரத்து 274 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2 லட்சத்து 98 ஆயிரத்து 62 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 258 பேரும், தனியார் மருத்துவமனையில் 220 பேரும் என 478 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் அதிகபட்சமாக சென்னையில் 91 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் 43 பேரும், கோவையில் 39 பேரும், திருச்சியில் 30 பேரும், கன்னியாகுமரியில் 25 பேரும், ராணிப்பேட்டையில் 24 பேரும் உயிரிழந்துள்ளனர். வேலூரில் 23 பேர், காஞ்சீபுரத்தில் 22 பேர், சேலத்தில் 19 பேர், விருதுநகரில் 15, மதுரையில் 14, திருப்பூர், கரூரில் தலா 12 பேர், நாகப்பட்டினத்தில் 10 பேர் உள்பட 36 மாவட்டங்களில் 478 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 108 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 24 ஆயிரத்து 232 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 31,223 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 503 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 3 லட்சத்து 1,781 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்