கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண்-பெண் இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கும் அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்

கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் சமமான, கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் அவசர சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2021-06-02 19:57 GMT
சென்னை,

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதை எங்கள் சங்கம் வரவேற்கிறது. அதேநேரம் நடிகை சாந்தினி மீதும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, அவரையும் கைது செய்ய வேண்டும்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஏற்கனவே திருமணமானவர் என்பதை நன்கு அறிந்தும் அவருடன் நெருங்கிப் பழகி, 3 முறை சாந்தினி கருக்கலைப்பு செய்து உள்ளார். இவர் ஒரு குடும்பத்தை பிரிக்க திட்டமிட்டு கூட்டுச்சதி செய்து, பின்னர் அதைப் பயன்படுத்தி மிரட்டலும் விடுக்கிறார் என்று தெரிகிறது.

தவறான எண்ணம்

இந்திய தண்டனைச் சட்டம் 497 (கள்ளத்தொடர்பு) பிரிவை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்துவிட்டது. இதனால் கள்ளத்தொடர்பு தவறு இல்லை என பொதுமக்கள் தவறாக எண்ணும்படி ஆகிவிட்டது. உண்மையில் ஆங்கில காலத்தில் இயற்றப்பட்ட பழமையான இந்த சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, இந்தக் கால சூழலுக்கு ஏற்றவாறு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்றுதான் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

கடுமையான தண்டனை

இந்த சூழ்நிலையில் நடிகை, பாடகி, கவிஞர் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் சில பெண்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் நட்பை தேடிச் சென்று ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

பின்னர், மகிழ்ச்சியாக வாழும் அந்த பிரபலங்களின் குடும்பத்தை மிரட்டி பணம் பறிக்கும் செயல், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது.

எனவே, கள்ளக்காதலில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் சமமான, கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்