தமிழகத்தில் கொரோனா இல்லாத நிலை விரைவில் உருவாகும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் 25 ஆயிரம் படுக்கைகள் காலியாக இருக்கிறது என்றும், கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை விரைவில் உருவாகும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Update: 2021-06-03 00:02 GMT
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்களும், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் பலரும் கொரோனா நிவாரண நிதிகளை வழங்கி கொண்டிருக்கின்றனர். பல்வேறு அமைப்பினர், பல்வேறு வகையில் கொரோனா நிவாரணத்துக்காக உதவி கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பல தனியார் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 72 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த செறிவூட்டிகள் 72 படுக்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதிப்பு வேகமாக குறைகிறது

தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பெருந்தொற்று வேகமாக குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 4 நாட்களாக பாதிக்கப்பட்டவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்னால் அரசு மருத்துவமனைகளில், ஒரு படுக்கையாவது கிடைத்துவிடாதா? என்ற ஏக்கத்தில் பொதுமக்கள் அவதி பட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால், தமிழக முதல்-அமைச்சரின் நடவடிக்கையால், நேற்று (நேற்று முன்தினம்) 8 ஆயிரத்து 72 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் காலியாக இருந்தது. அதேபோல், 16 ஆயிரத்து 444 சாதாரண படுக்கைகளும், 618 தீவிர சிகிச்சை படுக்கைகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 134 படுக்கைகள் காலியாக இருந்தது.

கொரோனா இல்லாத நிலை

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை விரைவில் உருவாகும். ஜூன் மாதத்துக்கு என்று 42 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வர இருக்கிறது. அதில் முதற்கட்டமாக 5 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அந்த தடுப்பூசிகளை உடனே 37 மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. இன்னும் 37 லட்சம் தடுப்பூசிகள் வர இருக்கிறது.

தொற்றின் அளவு மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தம் 4-ந் தேதியுடன் முடிகிறது. 5-ந் தேதி ஒப்பந்தத்துக்கான இறுதி நாள். எத்தனை நிறுவனங்கள் பங்கேற்றுள்ளனர், அதில் யார் தகுதியானவர்கள் என்பது 5-ந் தேதி தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்