தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தயாராக வேண்டும் தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தல்

கேரளாவை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்திலும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த தயாராகவேண்டும் என்று தமிழக அரசுக்கு, கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-06-04 21:57 GMT
சென்னை,

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானதாகவே முடியும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். இந்த விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள கல்விக் கட்டமைப்பின்படி, மேல்நிலைப் பள்ளித்தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் கல்லூரி சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவு தேர்வுகளுக்கும், வெளிநாடுகளில் கல்வி பயில விண்ணப்பிப்பதற்கும், வேலைவாய்ப்புகளுக்குத் தகுதி பெறுவதற்கும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அவசியமானதாகிறது.

பெருந்தொற்றின் அபாயகரமான காலத்தில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது சரியா? என்று கேட்டால், திட்டமிடுதலுடன் சற்று காலதாமதமாகவேனும் பொதுத்தேர்வு நடத்துவதே சரியானதாக இருக்கும். கொரோனா 2-ம் அலை தணிந்ததும், 3-ம் அலை ஏற்படுவதற்கு முன்னதாக அனைத்து முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்பான சூழலில் தேர்வு நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே சரியானது. நோய்த்தொற்றின் வேகம் குறைந்ததும், தேர்வுக்கான அட்டவணையை முன்கூட்டியே வெளியிட்டு, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராவதற்கான கால அவகாசம் வழங்கலாம்.

சிறந்த முடிவு

தேவையிருப்பின், தேர்வுக்கான பாடத்திட்டத்தின் அளவை குறைக்கலாம். முன்களப்பணியாளர்கள் என்ற வகையில் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்படியே 12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்து அவர்களைப் பாதுகாக்கலாம். உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வு நடத்தலாம். தேர்வு தாமதமாக நடத்தப்பட்டால் தேசிய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைவிட தேர்வை ரத்து செய்வதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதே கவனிக்கப்படவேண்டியது.

சில மாநிலங்கள் பொதுத்தேர்வை ரத்து செய்தபோதும், முறையான திட்டமிடுதலுடன் பொதுத்தேர்வை நடத்திக் காட்டியிருக்கிறது கேரள அரசு. கேரளத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டிலும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்தத் தயாராக வேண்டும். தற்போதைய சூழலை மட்டும் மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு மாணவர்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றைச் சிதைத்துவிடக்கூடாது. பெரும்பான்மையான பெற்றோர்கள் தேர்வு நடத்தவேண்டும் என்றே விரும்புகிறார்கள். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மனிதவளத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைத் தீர்க்கமாக விவாதித்து சிறந்த முடிவை தமிழக அரசு எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்