தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து - முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மாணவர் நலன் கருதி தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2021-06-05 15:09 GMT
சென்னை,

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவது குறித்து தமிழக அரசு கடந்த 3 நாட்களாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தியது. இது தொடர்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

மேலும் சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரநிதிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அனைத்து தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலன் காக்கப்பட வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தினர்.

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு அறிந்த பின்னர், இது குறித்த அறிக்கையை தயார் செய்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஸ்டானை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கையை சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்-அமைச்சர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில் மாணவர்களின் நலன் கருதி தேர்வு ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள் என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்