தமிழகத்தில் 921 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-06 22:19 GMT
சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலே சில நேரங்களில் எதிர்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தீவிர சிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்ட நோயாளிகள் ஏற்கனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவராகவும், சர்க்கரை நோய் போன்ற பாதிப்புடையவராகவும் இருக்கும்பட்சத்தில், ஸ்டீராய்டு மருந்தின் எதிர்விளைவும் சேர்ந்து அவர்களுக்கு கருப்பு பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கண் மற்றும் மூளை நரம்புகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், தமிழகத்தில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோயைத் தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதேபோன்று அதற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்தும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.

921 பேர் பாதிப்பு

தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கருப்பு பூஞ்சைக்காக அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் இதுவரை 921 பேருக்கு அத்தகைய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் 95 சதவீதம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், சென்னையில் மட்டும் 277 பேர் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கருப்பு பூஞ்சை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 2,470 ஆம்போடெரிசின் மருந்துகளை இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர அவற்றை கூடுதலாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்