கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுதான் காரணம் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்தான் காரணம் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-07 23:08 GMT
சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கை, சிகிச்சை முறைகள், மருந்து மற்றும் ஆக்சிஜன் ஒதுக்கீடு குறித்து சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா பரவலின் 2-வது அலை கட்டுக்குள் இருப்பதாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த செயல்பாடு

அதைத்தொடர்ந்து நீதிபதிகள், ‘2-வது அலை பரவத் தொடங்கிய நாட்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாவிட்டாலும், பின் நாட்களில் மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு போன்றவை கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கிய காரணங்களாக இருந்துள்ளன’ என கருத்து தெரிவித்தனர்.

மேலும், கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய்களுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றை ஒதுக்கும் பணி தற்போது சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த நீதிபதிகள், நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வரை இது தொடர வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு முன்னுரிமை

பின்னர், ‘இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை பல நாடுகள் விலக்கிவரும் நிலையில், கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும், சிறுபயணமாக இந்தியா வந்து திரும்புபவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

அதன்பின்பு, தடுப்பூசியின் அவசியம் குறித்து மேற்கொண்டுவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்