கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழு அமைப்பு தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்றினால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க வழிகாட்டுதல் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-09 22:34 GMT
சென்னை,

இதுகுறித்து சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தையில் ஒருவரையோ, அல்லது 2 பேரையுமோ இழந்த குழந்தைகளின் நலன் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை கடந்த மே 29-ந்தேதி முதல்-அமைச்சர் அறிவித்தார்.

முதல்-அமைச்சர் அறிவித்துள்ள அந்த நல உதவிகள் மிகச்சரியாக பயனாளிகளிடம் சென்று சேர்வதற்கான வழிகாட்டும் கொள்கையை உருவாக்குவதற்காக குழு அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

குழு அமைப்பு

மேலும், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தலைமையில், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மைச் செயலாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை உறுப்பினராக கொண்ட குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தொற்று காரணமாக தாய், தந்தையில் ஒருவரையோ, அல்லது 2 பேரையுமோ இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டம் சரியாக சென்றடைவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது.

உறுப்பினர்கள் நியமனம்

அதில், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் முதன்மைச் செயலாளர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர், சமூகநலத்துறை ஆணையர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இருந்து அரசால் தேர்வு செய்யப்படும 2 பேர் உறுப்பினராக இருப்பார்கள். சமூக பாதுகாப்பு ஆணையர், அந்த குழுவின் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்