நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-10 23:34 GMT
சென்னை,

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

அதேபோன்று மதுரை உள்பட பல்வேறு இடங்களில் திறந்த வெளி கூடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெல் மூட்டைகளும் மழையால் நனைந்து நாசம் அடைந்தன. இதுகுறித்து விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தனர்.

சேதம் அடைய விடலாமா?

அப்போது நீதிபதிகள், ‘நெற்பயிர்களை பாதுகாத்து அறுவடை செய்வதற்கு விவசாயிகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவ்வாறு கஷ்டப்பட்டு அறுவடை செய்யும் நெற்பயிர்களை சேதம் அடைய விடலாமா?, மழை நீரில் நெற்பயிர்கள் வீணாவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லாத பட்சத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்' என்று தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை காய வைப்பதற்காக கொண்டு வரப்பட்டபோது அவை மழையில் நனைந்துள்ளதாகவும், இதுசம்பந்தமான முழு விவரங்களை பெற்று தெரிவிப்பதாகவும் கூறினார்.

உடனடி நடவடிக்கை

இதைத்தொடர்ந்து, நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர், இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்