புதுச்சேரி சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. செல்வம் பதவியேற்றார்

புதுவை சபாநாயகராக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தலுக்கு பின் முதல்முறையாக இன்று கூடும் சட்டசபையில் அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.

Update: 2021-06-16 05:21 GMT
கோப்புப்படம்
புதுச்சேரி, 

சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றின. சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளை கைப்பற்றி இந்த கூட்டணி ஆட்சியை பிடித்தது.

இதையடுத்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்-அமைச்சராக கடந்த மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றார். அப்போது அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

அதன்பின் அமைச்சர் பதவிகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட 3 இடங்களை கேட்டு பா.ஜ.க. பிடிவாதம் காட்டியது. அதற்கு ரங்கசாமி மறுத்ததால் முரண்பாடு ஏற்பட்டது.

பா.ஜ.க. மேலிடம் ரங்கசாமியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. அதாவது, சபாநாயகர், 2 அமைச்சர்கள் தருவதாக ரங்கசாமி ஒப்புக் கொண்டார். இதை பா.ஜ.க.வும் ஒத்துக் கொண்டதால் இருகட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அடுத்ததாக சபாநாயகர், அமைச்சர்கள் பதவிக்கு யாரை நியமிக்கலாம்? என்பது குறித்து ஆலோசனை நடத்தியது. அதன் முடிவில் ஏம்பலம் செல்வத்தை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி சபாநாயகர் வேட்பாளராக ஏம்பலம் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில் சபாநாயகர் தேர்வுக்கான அறிவிப்பை சட்டசபை செயலாளர் முனிசாமி கடந்த 12-ந் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். நேற்று முன்தினம் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட ஏம்பலம் செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்மொழிந்தார். பா.ஜ.க. சட்டமன்ற கட்சித் தலைவர் நமச்சிவாயம் வழிமொழிந்தார்.

சபாநாயகர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள், நேற்று பகல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஏம்பலம் செல்வம் போட்டியின்றி தேர்வானார்.

இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (புதன் கிழமை) காலை கூடிய சட்டமன்ற கூட்டத்தில் தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமியும், எதிர்க்கட்சி தலைவர் சிவாவும் சேர்ந்து ஏம்பலம் செல்வத்தை அழைத்து வந்து சபாநாயகர் ஆசனத்தில் அமர வைத்தனர். 

புதுச்சேரி சட்டசபை வரலாற்றில் பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக புதுவை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என்று கூறப்பட்டது. இதையொட்டி அவர்களுக்கான கார்களும் தயார் நிலையில் சட்டசபை வளாகத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போய் உள்ளது.

மேலும் செய்திகள்