கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழக அரசு இடம் அளிக்கக்கூடாது: எடப்பாடி பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக மாநில முதல்வர் அறிவித்துள்ளமைக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-19 08:29 GMT

இது தொடர்பாக,  எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

"தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்வது காவிரி ஆற்றின் நீர். இந்த காவிரி நீரை முறையாக பெறுவதற்கு ஜெயலலிதா மற்றும் ஜெயலலிதாவின் அரசு பல சட்டப் போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டம் 1956 இல் பிரிவு 5(2) இல் குறிப்பிட்டுள்ளவாறு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையை 5.2.2007 அன்று பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டத்தினாலும், ஜெயலலிதா அரசு கொடுத்த அழுத்தத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு, இரு மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் 177.25 டிஎம்சி அடி நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, ஜெயலலிதா அரசின் சட்டப் போராட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது.
மேலும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தவும், ஜெயலலிதா அரசு 30.11.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளின் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டி இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது:

* மத்திய நீர்வளக் குழுமம் 22.11.2018 அன்று கர்நாடகாவின் காவிரி நீரவாரி நிகம் நிறுவனத்திற்கு மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதிக்கு தடை விதித்தல்;

* மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர்வளக் குழுமத்தின் 22.11.2018-ம் தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெறுதல்;

* கர்நாடகாவின் காவிரி நீரவாரி நிகம் நிறுவனம், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை நிறுத்தி வைத்தல்;

* கர்நாடக அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் மற்றும் எந்தவொரு முகமையும், கர்நாடக எல்லைக்குள் காவிரி படுகையில் எந்தவொரு அணைக்கட்டுதல் போன்ற திட்டத்தை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடருதல்.

மேலும் நான், பிரதமரை நேரில் சந்தித்தபோது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.

தொடர்ந்து, கர்நாடக அரசு 20.6.2019 அன்று சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கக் கோரி, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தை அணுகியுள்ளதை அறிந்து, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.

பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன் படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசைதிருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் 5.12.2018 அன்று எனது தலைமையிலான அப்போதைய தமிழக அரசு, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணைகளை மீறி, மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியதை அடுத்து;

* மத்திய நீர்வள குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குநர்;

* கர்நாடக அரசின் நீர்வள ஆதாரத் துறைச் செயலாளர்;

* மற்றும் பிறர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இதுசம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்வரின் ஒருதலைபட்சமான அறிவிப்புக்கு, எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழகத்திற்கு கிடைக்கப் பெறுகின்ற காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்குக்கு, எள்முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழகத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்