கொரோனா பாதிப்பு நிவாரண 2-ம் தவணைத் தொகையுடன் 14 மளிகை பொருள் தொகுப்பை நாளைக்குள் வினியோகிக்க வேண்டும்

கொரோனா பாதிப்பு நிவாரண 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருள் தொகுப்பை நாளைக்குள் வினியோகிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-06-23 22:24 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலினால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதில் முதல் தவணை தொகையாக ரூ.2 ஆயிரமும், 2-ம் தவணைத் தொகையாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி முதல் தவணை தொகை வழங்கும் திட்டத்தை மே 10-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து மே 15-ந்தேதியில் இருந்து முதல் தவணை தொகை, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது.

2-ம் தவணை தொகை

அதுபோல 2-ம் தவணை தொகையை வழங்கும் திட்டத்தை ஜூன் 3-ந்தேதியன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 2-ம் தவணை தொகையான ரூ.2 ஆயிரம், 15-ந்தேதியில் இருந்து ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு உத்தரவிட்டு இருந்தது.

கடிதம்

இந்த நிலையில் 2-ம் தவணை தொகையை 25-ந்தேதிக்குள் (நாளை) வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாளைக்குள்....

கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2-ம் தவணை தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 15-ந்தேதி முதல் வினியோகம் செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது 25-ந்தேதிக்குள் (நாளை) இவை வினியோகம் செய்து முடிக்கப்பட வேண்டும் என்று அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் கடந்த 11-ந்தேதி நடத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்