வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கியதில் மளிகை கடைக்காரர் சாவு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது

ஆத்தூர் அருகே வாகன சோதனையின் போது, போலீஸ் தாக்கியதில் மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரை தாக்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-23 23:57 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இடையப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளையன் என்ற முருகேசன் (வயது 45). இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு ஜெயப்பிரியா(18), ஜெயப்பிரதா (17) ஆகிய 2 மகள்களும், கவிப்பிரியன் (13) என்ற மகனும் உள்ளனர்.

முருகேசன் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை கருமந்துறை பகுதிக்கு நண்பர்கள் சிவன் பாபு, ஜெயசங்கர் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கு உறவினர் ஒருவரை பார்த்து விட்டு மாலையில் அவர்கள் திரும்பி உள்ளனர்.

போலீசார் தாக்கினர்

வழியில் பாப்பிநாயக்கன்பட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் சுற்றி வளைத்து மளிகை கடைக்காரர் முருகேசனை லத்தியால் அடித்து தாக்கினர். இதில் அவர் ரோட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், தும்பல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முருகேசன் கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

பரிதாப சாவு

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், அவரது உறவினர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனிடையே முருகேசனை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இதைத்தொடர்ந்து ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முருகேசனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரித்து உரிய நடவடிக்கை எடு்ப்பதாக டி.ஐ.ஜி. மகேஸ்வரி உறுதி அளித்தார்.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதையடுத்து போலீசார் தாக்கியதில் முருகேசன் இறந்ததாக ஏத்தாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில், சம்பந்தப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமியை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை பணி இடை நீக்கம் செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மகேஸ்வரி அதிரடியாக உத்தரவிட்டார்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பா.ம.க. நிர்வாகிகளும், பொதுமக்களும், பாதிக்கப்பட்ட முருகேசன் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றாவிட்டால் முருகேசன் உடலை நாங்கள் வாங்க மாட்டோம் என போலீஸ் நிலையம் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பேச்சுவார்த்தை

உறவினர்கள், பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் தமிழக அரசிடம் உரிய அறிக்கை சமர்ப்பித்து நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்