திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கைகளுடன் பேறுகால அவசர சிகிச்சை மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2021-07-08 03:19 GMT
திருவாரூர்,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று ரூ.10½ கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் 2 தளங்களுடன், 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 250 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர், அந்த சிகிச்சை மையத்தின் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த புதிய கட்டிடத்தில், மகப்பேறு மருத்துவத்திற்கு 200 படுக்கைகளும், சிசு தீவிர சிகிச்சைக்காக 50 படுக்கைகளும், என மொத்தம் 250 படுக்கைகள் உள்ளன.

தரைத்தளத்தில் புறநோயாளிகள் பிரிவு, பிரசவத்துக்கு முன் மற்றும் பின் கவனிப்பு பிரிவுகள், தீவிர சிகிச்சை பிரிவு, அலுவலக அறை போன்ற அறைகளும், டாக்டர் மற்றும் செவிலியர் அறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இந்த மையத்தில் உள்ளன. இதன்மூலம் இந்த ஆஸ்பத்திரியில் ஒரு மாதத்திற்கு சுமார் 500 முதல் 600 பிரசவ தாய்மார்களும், 250 சிசுக்களும் உள்நோயாளிகளாக பயனடைவார்கள்.

கருணாநிதி திறந்து வைத்த மருத்துவக்கல்லூரி

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி கருணாநிதியால் 2010-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லூரி 100 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மற்றும் கல்லூரி மருத்துவமனை 550 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை, குழந்தைகளுக்கான கொரோனா சிறப்பு சிகிச்சை, மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை சிகிச்சை ஆகிய சிகிச்சைகளுக்காக மொத்த படுக்கை வசதி 1,270 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கலெக்டருக்கு பாராட்டு சான்றிதழ்

இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின், திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் அனைவருக்கும் (2,334 நபர்களுக்கு) கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதற்காக திருவாரூர் மாவட்ட கலெக்டர் ப.காயத்ரி கிருஷ்ணனுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கினார். ஊராட்சி மன்றத் தலைவர் விமலா பிரபாகரன் உடனிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், பூண்டி கே.கலைவாணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தேசிய நலவாழ்வுக்குழும இயக்குநர் டாக்டர் தாரேஸ் அகமது, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி. ஜோசப் ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்