போக்குவரத்து கழகங்களில் எதிர்க்கட்சி தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

Update: 2021-07-10 00:54 GMT
சென்னை, 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அனைத்துக் கோட்டங்களிலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவிர மற்ற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவது உள்ளிட்ட பல வழிகளில் பழிவாங்கப்படுகிறார்கள். அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய நிர்வாகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த காலங்களில் ஆளுங்கட்சி ஆதிக்கம் என்பது எளிதான பணிகளை ஆளுங்கட்சியினருக்கு வழங்குவது என்ற அளவிலேயே இருந்து வந்தது. ஆனால், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சித் தொழிற்சங்கத்தினருக்கு பணிவாய்ப்பு மறுக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

பாட்டாளி தொழிற்சங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் அவர்கள் இதுவரை பணியாற்றி வந்த வழித்தடங்களில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி, அச்சுறுத்தி எதிர்க்கட்சியினரை ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தில் சேர்க்கலாம். அவர்களை கட்டாயப்படுத்தி சந்தா வசூலிக்கலாம் என்று நினைத்தால், அந்த அத்துமீறல் அதிக காலம் நீடிக்காது.

எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அனைத்துப் பணியாளர்களையும் ஒன்றாக பார்க்க வேண்டும். அவர்களை பழிவாங்காமல் அவர்களின் பணியை அமைதியாகவும், நிம்மதியாகவும் செய்ய அனுமதிக்க வேண்டும். அதன்மூலம் தொழிலாளர்களும், போக்குவரத்துக் கழகங்களும் வளர வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்