தமிழக அரசின் மேகதாது அணை பற்றிய தீர்மானம்; த.மா.கா. ஆதரவு

தமிழக அரசு மேகதாது அணை தொடர்பாக இயற்றிய தீர்மானத்திற்கு த.மா.கா. துணை நிற்கும் என ஜி.கே. வாசன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-15 10:37 GMT
சென்னை,

சென்னை அண்ணா சாலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான, மறைந்த காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமராஜர் பிறந்த தினத்தை கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக முன்னெடுத்துள்ளதாகவும், பொதுமக்களிடம் முகக்கவசம் உள்ளிட்ட தமிழக அரசின் நெறிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு இயற்றியுள்ள தீர்மானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.  வரும் காலங்களில் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும் எனவும், விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு விவசாய பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் எனவும் அவர் பேட்டியில் கூறியுள்ளார்.

அ.தி.மு.க., பா.ஜ.க. அடங்கிய கூட்டணியில் இடம் பெற்றுள்ள சூழலிலும், தமிழக விவசாய பெருமக்களின் நலன் சார்ந்த தமிழக அரசின் தீர்மானத்திற்கு த.மா.கா. ஆதரவு தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்