நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை; பவானிசாகர் அணையின் நீர்வரத்து உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

Update: 2021-07-17 00:51 GMT
ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.  நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து  வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. 

பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது.

இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்வரத்து 5 ஆயிரத்து 17 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 94.76 அடியாகவும், மொத்த நீர் இருப்பு 24.8 டி.எம்.சி ஆகவும் உயர்ந்துள்ளது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீர் மற்றும் வாய்க்கால் பாசனத்திற்காக 850 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

மேலும் செய்திகள்