நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை; ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் உபரிநீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2021-07-19 00:43 GMT
தர்மபுரி,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, உத்தர கன்னடாஹாசன் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

இதையடுத்து, இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் மற்றும் ஒகேனக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை நீரும் சேர்ந்து ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 5,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8,000 கனஅடியாகவும், காலை 11 மணியளவில் 12,000 கனஅடியாகவும், மாலை 3 மணி அளவில் 15,000 கனஅடியாகவும், மாலை 5 மணிக்கு 18,000 கனஅடியாகவும் தொடர்ந்து அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரிப்பால் தருமபுரி மாவட்ட காவிரி கரையோரப் பகுதிகளில் வருவாய், வனத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு காரணமாக அருவியில் பயணிகள்குளிக்கவும், பரிசலில் ஆற்றில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்