அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கு: நிராகரிக்க கோரிய மனு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2021-07-20 09:28 GMT
கோப்புப்படம்
சென்னை, 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா சிறைக்குச் சென்றார். அவர் சிறையில் இருந்த போது கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. 

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனின் பதவி செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தையும், கூட்டத்தில் இயற்றப்பட்ட 12 தீர்மானங்களைச் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்தனர். 

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அமமுக என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருவதால், இந்த வழக்கில் இருந்து தான் விலகிக் கொள்வதாக டிடிவி தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தரப்பில் தொடந்துள்ள வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு சசிகலா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரவி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்