மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ஐகோர்ட் இடைக்கால தடை

நிதி நெருக்கடி காரணமாக 10% பேருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-07-22 09:30 GMT
கோப்புப்படம்
சென்னை, 

கல்வி நிலையபேருந்துகள், அரசு பொதுப்பேருந்துகள் மற்றும் இரயில்கள் போன்றவற்றில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் உள்ள இருக்கைகளை கொண்ட வடிவமைப்புகள் இடம்பெற வேண்டும் என்று கடந்த 2016 ஆம் வருடம் சட்டம் இயற்றப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ள பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் தற்போது வரை பேருந்துகள் வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த மனு தொடர்பான விசாரணை சென்னை நீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுமார் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளின் வசதிகளுக்காக உபயோகம் செய்யக்கூடிய பேருந்துகளாக உள்ளது. கூடுதல் பேருந்துகள் இன்று வரை அரசால் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

அரசு தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர் வாதாடுகையில், தற்போது சாலைகளின் தரம் குறைவாக உள்ளது. சாலைகளின் தரம் மேம்படுத்தப்பட்ட பின்னர், அரசு உத்தரவு மற்றும் சட்டத்தின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்துகள் அதிகளவில் கொள்முதல் செய்யப்படும். தற்போது குறிப்பிட்ட அளவு பேருந்துகளில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர், சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கொண்ட பேருந்துகளை இயக்க ரூபாய் 58 இலட்சம் செலவாகும். தற்போது 10% பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகளுக்காக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நிதி பிரச்சனையும் உள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தற்போது உள்ளது. இந்தியா ஏழை நாடு என்று அவர் வாதிட்டார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், எத்தனை எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஏழைகளாக உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், கடந்த 2016 ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் கீழ் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், புதிய பேருந்துகள் அதுவரை கொள்முதல் செய்ய இடைகாலத்தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். பின்னர் வழக்கு விசாரணையை 4 வாரங்கள் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்