நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்

நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

Update: 2021-07-22 21:21 GMT
சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எரிசக்தி துறையின் செயல்பாடுகள் குறித்தும், துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தலைமை செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள நீரேற்று புனல்மின் திட்டங்களில் நடைமுறைக்கு உகந்த திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்திடவும், பசுமை வழித்தடம் 2-வது பகுதியை அமைக்க புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிடமிருந்து மானியத்தை விரைந்துபெற்று பணிகளை முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்உற்பத்தி திட்டப்பணிகள் மற்றும் இணை மின் உற்பத்தி திட்டங்கள் குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

செல்போன் செயலி

நிலக்கரி கையாளுவதில் ஏற்படும் போக்குவரத்து செலவீனங்களை குறைக்கவும், தமிழகத்துக்கு ஒப்பந்தப்படி கிடைக்கவேண்டிய நிலக்கரி சதவீதத்தை பெற அனைத்து முயற்சிகளை மேற்கொள்ளும்படியும் அதிகாரிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இறக்குமதி நிலக்கரியை வருடாந்திர ஒப்பந்தத்துக்கு பதிலாக நீண்டகால ஒப்பந்தங்களாக செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழக அரசு கடந்த 2 மாதங்களில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ரூ.1,593 கோடி சேமித்தது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதிநிலைமையை சரிசெய்யவும், நுகர்வோர் சேவையை மேம்படுத்தவும், மின்அளவீடு மற்றும் கணக்கீட்டை செல்போன் செயலி மூலம் அறிந்துகொள்ளவும், கட்டணம் செலுத்தவும் புதிய செயலியை அறிமுகப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

அதனைத்தொடர்ந்து மின் ஆய்வுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மின் வரி வசூல் குறித்தும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் ஆணையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ஒழுங்குமுறை விதிகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்