மாநகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம்: ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு, ஷேர், வாடகை ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், சவாரி கிடைக்காமல் தவிப்பதாகவும் அவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Update: 2021-07-23 22:09 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு காலத்தில் பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன. அதன்பிறகு, தளர்வுகள் கொண்டுவரப்பட்டு, பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் மாநகர, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை பெண்கள் அனைவரும் வரவேற்றனர்.

பெண்களை தொடர்ந்து, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் மாநகர மற்றும் நகர பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியானது. அதன்படி, பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாநகர மற்றும் நகர பஸ்களில் ஏறி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு பக்கம் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு வரவேற்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் இதனால் சிலருடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் ஷேர், வாடகை ஆட்டோ டிரைவர்கள் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

சவாரி கிடைப்பது இல்லை

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த எஸ்.பாலசுப்பிரமணியம் (வாடகை ஆட்டோ) :-

ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியில் செல்கிறார்கள் என்றால்தான், ஆட்டோவை தேடி வருவார்கள். அந்தவகையில் வாடகை ஆட்டோவுக்கு சவாரி தேடிவந்தது.

ஆனால் இப்போது பெண்களுக்கு பஸ்களில் இலவசம் என்று அறிவித்ததும், பெரும்பாலான பெண்கள் பஸ்களில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதனால் எங்களுக்கு சவாரி கிடைப்பது இல்லை. வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றோம்.

ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு தவிக்கும் எங்களுக்கு இது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது. எங்களுக்காவது ஏதாவது ஒரு வாடகை வந்துவிடும். அதை வைத்து சமாளிக்கிறோம். ஆனால் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது.

தொழில் ரீதியாக பாதிப்பு

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த லட்சுமி (வாடகை ஆட்டோ) :-

நான் 28 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுகிறேன். இப்போது பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதனை ஒரு பெண்ணாக நான் வரவேற்கிறேன். ஆனால் தொழில் ரீதியாக பார்க்கையில் என்னை போன்ற ஆட்டோ டிரைவர்களுக்கு பாதிப்புதான்.

அவசரமாக வெளியில் போக வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மட்டும் தான் தற்போது ஆட்டோவை தேடி வருகிறார்கள். மற்றபடி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல தேவையில்லை என்று கருதுபவர்களில் பலர் பஸ்களில் ஏறித்தான் பயணிக்கின்றனர்.

இதனால் எங்களுக்கு வழக்கமாக வரும் வாடகையில் 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. பள்ளிகள் திறப்பு, அனைத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு என்ன நிலை இருக்கிறதோ? என்பது எங்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒட்டுமொத்த வாழ்வாதாரம்

சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த பாலாஜி (ஷேர் ஆட்டோ) :-

முகப்பேர் முதல் தியாகராயநகர் வரை ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ஓரளவுக்கு வருமானம் கிடைத்துவந்தது. பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணிக்கலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு என்ன செய்வது? என்று தெரியாமல் தவிக்கிறோம்.

இது ஒரு புறம் பாதிப்பு என்றால், மற்றொரு புறம் டீசல் விலை உயர்வால் வருமானமின்றி இருக்கிறோம். முன்பெல்லாம், ஷேர் ஆட்டோவில் அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள் அமர்ந்தபடி பயணிப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஷேர் ஆட்டோவில் பெரும்பாலும் பெண்கள் தான் அதிகம் பயணிப்பார்கள். தற்போது அவர்கள் அரசு பஸ்களின் வருகையை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். எங்களை யாரும் தேடுவதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்