தமிழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு தேதி அறிவிப்பு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் முதல்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 7-ந் தேதி தொடக்கம்

தமிழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. என்ஜினீயரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.

Update: 2021-07-26 03:06 GMT
சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு 19-ந் தேதி வெளியானது.

இந்தநிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

தேதி அறிவிப்பு

அதன்படி, என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு தேதியை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்டது.

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஒற்றை சாளர முறையில் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஆன்லைனில் பதிவு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், சான்றிதழ்களை பதிவேற்றுதல் என்ற அடிப்படையில் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது.

2021-22-ம் கல்வியாண்டு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். போன்ற படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு)24-ந்தேதி ஆகும். மாணவ-மாணவிகள் www.tneaonline.org என்ற இணையதளத்துக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

கலந்தாய்வு

விண்ணப்பப்பதிவு செய்தவர்களுக்கான ரேண்டம் எண் அடுத்த மாதம் 25-ந்தேதி வெளியிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தரவரிசை பட்டியல் செப்டம்பர் மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு தொடங்கி நடைபெறும்.

முதலில் மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு மாணவர்கள், முன்னாள் படை வீரர்களின் குழந்தைகள் ஆகிய சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

அதன்பின்னர், பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 14-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள்

இந்த கலந்தாய்வு நிறைவு பெற்றதும், காலியாக இருக்கும் இடங்களுக்கு துணை கலந்தாய்வு நடத்தப்படும். அந்தவகையில் துணை கலந்தாய்வு அக்டோபர் 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும், எஸ்.சி.ஏ.வில் இருந்துஎஸ்.சி.க்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ந்தேதி முதல் 20-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இந்த அட்டவணையின்படி கலந்தாய்வு அக்டோபர் 20-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக கலந்தாய்வு தாமதமாகவே தொடங்கியது. கடந்த ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி கலந்தாய்வு தொடங்கியது. மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 406 மாணவ-மாணவிகளே கலந்து கொண்டனர். அந்தவகையில் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன.

நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில், சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இந்த கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்