ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் அடுத்த மாதம் 3-ந்தேதி தீர்ப்பு

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு அடுத்த மாதம் 3-ந்தேதி பிறப்பிக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-07-27 03:18 GMT
சென்னை,

ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டுக்களை நடத்தும் நிறுவனங்கள், சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தன.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்குகள் இறுதி விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

ஜல்லிக்கட்டு மரணம்

ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதித்ததாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை இறக்கின்றனர். இதனால், ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. ஆனால், தமிழக அரசு சிறப்பு சட்டத்தை இயற்றி ஜல்லிக்கட்டை கொண்டு வந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் தமிழக அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதிப்பது சட்டவிரோதம். ஆன்லைன் விளையாட்டு தனி நபர் திறமைகளுக்கான விளையாட்டு. அது சூதாட்டம் இல்லை’’ எனறும் வாதிட்டனர்.

பொதுநலன்

தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘‘இந்த விளையாட்டால் நிறைய பேர் பணத்தை இழந்துள்ளனர். பலர் தற்கொலை செய்துள்ளனர். பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது’’ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை வருகிற ஆகஸ்டு 3-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்