சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முற்றுகை

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-07-27 17:44 GMT
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
ஊர்வலம்
புதுவை மண்ணாடிப்பட்டு அருகே கொடாத்தூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் அவரை கடத்திச்சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்யவேண்டும் என  வலியுறுத்தி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே அவர்கள் கூடினார்கள்.
அங்கிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பாவாணன் தலைமையில்  சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது மறைமலையடிகள் சாலையில் போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.
போலீசாரை கண்டித்து கோஷம்
இதைத்தொடர்ந்து ஆட்சியாளர்கள், போலீசாரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அந்த வழியாக வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் சமரசத்தை ஏற்கவில்லை.
தொடர்ந்து உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று போலீஸ் பஸ்சில் ஏற்றி சென்று அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.
மீண்டும் முற்றுகை 
பின்னர் அவர்கள் நேராக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று மீண்டும் அங்கு முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டுகள் ரச்சனாசிங், ஜிந்தா கோதண்டராமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டக் காரர்கள் உயர் போலீஸ் அதிகாரிகள் இங்கு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து போலீஸ் டி.ஜி.பி.யிடம், போலீசார் செல்போன் மூலம் பேசினர். அப்போது அவர் விசாரணை அதிகாரியை மாற்றுவதாக கூறினார். இதுகுறித்து போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அவர்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
---

மேலும் செய்திகள்