கடன் தொல்லையால் விபரீதம்: மனைவி, மகள், தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை

ஓசூரில் கடன் தொல்லையால் மனைவி, மகள், தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-06 18:42 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மத்திகிரி சுவர்ணபூமி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் மோகன் (வயது 39), தொழில் அதிபர். இவருடைய மனைவி ரம்யா (33). மகள் அன்மயா (8), தாய் வசந்தம்மா (65). இவர்கள் அனைவரும் ஓசூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று வீட்டின் கீழ்தளத்தில் ரம்யா, படுக்கையறையில் அன்மயா, வசந்தம்மா ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர்.

அங்கு கட்டிலுக்கு அருகில் தரையில் மோகன் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் பிளாஸ்டிக் கவர் கட்டப்பட்டு இருந்தது. தகவல் அறிந்து வந்த மத்தகிரி போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் மோகன் கைப்பட எழுதி இருந்த ஒரு கடிதம் ஒன்று படுக்கை அறையில் உள்ள மேஜையின் மீது இருந்தது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

மோகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கப்பன் நகர் பகுதி. அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அதில் போதிய வருமானம் இல்லாமல் அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது.

எனவே கடன் பிரச்சினையால் மோகன் தனது மனைவி, மகள், தாய் ஆகியோருக்கு விஷம் கொடுத்து விட்டு அதன்பிறகு அவர், பிளாஸ்டிக் கவரை முகத்தில் கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் துடிதுடித்து இறந்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் அவர் எழுதிய கடிதத்தில், எனக்கு சொந்த பிரச்சினைகள் அதிகம் உள்ளது. வங்கியில் அதிக கடன் உள்ளது. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். எனது குடும்பத்தினரை தனியாக விட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களையும் என்னுடன் அழைத்து செல்கிறேன். அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் என்று மோகன் தனது கைப்பட அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதி உள்ளார். 4 பேர் சாவு குறித்து மத்திகிரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவி, மகள், தாயை கொன்று தொழில் அதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்