சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதா? வேல்முருகன் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதா? வேல்முருகன் கண்டனம்.

Update: 2021-08-22 20:09 GMT
சென்னை,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன. இதில் 24 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அவை தவிர்த்து, மீதமுள்ள விக்கிரவாண்டி, ஓமலூர், தர்மபுரி உள்ளிட்ட 24 சுங்கச்சாவடிகளில் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பன்னாட்டு முதலாளிகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் வரி பணத்தை மானியமாக வழங்கும் மத்திய அரசு, சில ஆயிரம் கோடிகள் கொடுத்து, தனியார் நிறுவனங்களின் கொள்ளைக்காக மட்டுமே இயக்கப்படுகின்ற சுங்கச்சாவடிகள் அனைத்தையும் இழுத்து மூடவேண்டும்.

அதுமட்டுமின்றி, சுங்கச்சாவடிகளில் தனியார் நிறுவனங்கள், எவ்வளவு கட்டணம் வசூலிக்கின்றன, இந்த சாலையின் மதிப்பீடு என்ன?, எவ்வளவு காலம் வசூலிக்கலாம்? என அனைத்திற்கும், மத்திய அரசு தெளிவான வரையறைகளை முன்வைக்க வேண்டும்.

சாலை மதிப்பீட்டு தொகையை விட கூடுதலாக வசூலித்துள்ள நிறுவனங்களின் உரிமங்களை திரும்பப்பெற்று, அந்த நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி, அந்த தொகையை வட்டியுடன் வசூலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்