பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் இந்த ஆண்டு 2.90 லட்சம் வீடுகளுக்கு அனுமதி

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில், இந்த ஆண்டு 2.90 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

Update: 2021-08-24 22:05 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மானியக்கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதில் அளித்து இறுதியாக துறையின் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

19 ஆயிரம் மனுக்கள் மீது நடவடிக்கை

ஊரக வளர்ச்சித்துறை இந்த 100 நாட்களில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக இத்துறை சார்பில், ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ என்ற தலைப்பில் 71 ஆயிரத்து 170 மனுக்கள் பெறப்பட்டு, 18 ஆயிரத்து 927 மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தம் ரூ.1042.13 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

24 ஆயிரத்து 125 மனுக்கள் தகுதியான மனுக்களாக தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீட்டை எதிர்நோக்கி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. 28 ஆயிரத்து 118 மனுக்கள் தகுதி குறைவானவை என்று மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன.

2.90 லட்சம் வீடுகளுக்கு அனுமதி

பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தில் 9.11 லட்சம் பயனாளிகளுக்கு மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் தகுதியில்லாதவர்களை நீக்கம் செய்யும் பணி வருகிற 31-ந் தேதி முடிக்கப்பட்டு, நடப்பாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 லட்சத்து 89 ஆயிரத்து 887 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

30 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழ 18 ஆண்டுகாலம் இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த காரியத்தை செய்து இருக்கிறார்கள். குறிப்பிட்ட காலகட்டங்களில் தேர்தலை நடத்தாத காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து சில நிதிகளைப் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்