கேரளாவில் துறைமுக திட்டப்பணிகளுக்காக தமிழக கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன

கேரளாவில் துறைமுக திட்டப்பணிகளுக்காக தமிழக கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன உரிய நடவடிக்கை எடுக்க சரத்குமார் வலியுறுத்தல்.

Update: 2021-08-24 22:19 GMT
சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் நடைபெற்று வரும் விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக திட்டப் பணிகளுக்காகவும், தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை பணிகளுக்காகவும் 600 டிப்பர் லாரிகளில் தென்மாவட்ட கனிமவளங்கள், அனுமதியின்றி தினந்தோறும் எல்லை தாண்டி கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு விழிஞ்ஞம் துறைமுக திட்டத்திற்கு ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் கேரள அரசும், அதானி குழுமமும் ஒப்பந்தம் செய்ததன் அடிப்படையில், திட்டப்பணிகளுக்காக மலைகள் சூழ்ந்த தென் மாவட்ட பகுதிகளிலிருந்து பாறைகளை உடைத்து சட்டவிரோதமாக கேரளாவிற்கு வாகனங்களில் அனுமதியின்றி கொண்டு செல்லும் நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேரள மாநிலத்தின் தேவைக்காக கட்டப்படும் துறைமுகத்திற்கு தென்மாவட்ட கனிம வளங்களை ஏன் பலிகொடுக்க வேண்டும்? பாறைகளைத்தானே எடுத்து செல்கிறார்கள் என்று தற்போது அலட்சியப்படுத்தினால், வருங்காலத்தில் மலைகளின்றி, வறண்ட, வளமற்ற, நீர் ஆதாரமற்ற பகுதியாக தென் மாவட்டம் உருவாகிவிடும் சூழல் ஏற்படும்.

எனவே தமிழக அரசு உடனடியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில், மக்களை ஒன்றுதிரட்டி வலுவான போராட்டத்தின் மூலம் தென்மாவட்ட கனிமவளங்கள் பறிபோவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்