சென்னை போலீஸ் மீண்டும் 2 ஆக பிரிக்கப்படுகிறது கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் புறநகருக்கு புதிய போலீஸ் கமிஷனர்

சென்னை போலீஸ் மீண்டும் 2 ஆக பிரிக்கப்படுகிறது. புறநகர் பகுதிக்கு கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் புதிய போலீஸ் கமிஷனர் நியமிக்கப்படுகிறார்.

Update: 2021-08-24 23:14 GMT
சென்னை,

சென்னை போலீஸ் ஒரு பாரம்பரியம் மிக்கது. சென்னை போலீஸ் கமிஷனர் பதவியும், ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஒரு கனவு பதவியாகும். கடந்த 2008-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது, சென்னை போலீஸ் 2 ஆக பிரிக்கப்பட்டு, புறநகர் பகுதிக்கு புதிய கமிஷனரகம் அமைக்கப்பட்டு, தனி போலீஸ் கமிஷனர் நியமிக்கப்பட்டார். புறநகர் போலீசின் முதல் கமிஷனராக எஸ்.ஆர்.ஜாங்கிட் நியமிக்கப்பட்டார். பரங்கிமலை, அம்பத்தூர், மாதவரம் ஆகிய துணை கமிஷனர் சரகங்கள் புறநகர் போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டில் அப்போது செயல்பட்டது.

அதன்பிறகு 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி மலர்ந்தவுடன் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் கலைக்கப்பட்டு, மீண்டும் ஒருங்கிணைந்த சென்னை போலீஸ் கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிலையே நீடிக்கப்படுகிறது. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்ந்து விட்டது. இதனால் மீண்டும் சென்னை போலீஸ் 2 ஆக பிரிக்கப்பட்டு, புறநகர் போலீஸ் கமிஷனரகம் உதயமாகப்போகிறது.

விரைவில் அறிவிப்பு

புதிய புறநகர் போலீஸ் கமிஷனரகம் மாதவரம், அம்பத்தூர் ஆகிய துணை கமிஷனர் சரகங்களுடன் புதிதாக பரங்கிமலை துணை கமிஷனரகத்தை 2 ஆக பிரித்து தாம்பரம் துணை கமிஷனர் சரகமும், அம்பத்தூர் துணை கமிஷனர் சரகத்தை 2 ஆக பிரித்து புதிதாக பூந்தமல்லி துணை கமிஷனர் சரகமும் உருவாக்கப்படுகிறது. வண்டலூர், கேளம்பாக்கம் போன்ற பகுதிகள் புறநகர் கமிஷனரேட்டில் சேர வாய்ப்புள்ளது. திருவான்மியூரை தாண்டி நீலாங்கரை, கானாத்தூர் போன்ற பகுதிகளும் புறநகரில் சேரலாம்.

இது தொடர்பாக முதலில் சாதாரணமாக பேசப்பட்டாலும், தற்போது அது தொடர்பான வேலை தொடங்கி விட்டது என்றும், விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மட்டத்தில் சொல்லப்படுகிறது.

கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் கமிஷனர்

இந்தியாவில் பெரிய நகரங்களான மும்பை, ஐதராபாத் போன்றவற்றில் புறநகர் போலீஸ் கமிஷனரகம் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு வசதிக்காக செயல்படுவது போல, சென்னையிலும் மக்கள் நலன் கருதி புதிய புறநகர் போலீஸ் கமிஷனரகம் மீண்டும் செயல்படும் என்றும், கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் கமிஷனர் நியமிக்கப்படுவார் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எல்லைகள் பிரிக்கும் பணி நடப்பதாகவும் அந்த அதிகாரி கூறினார். கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் முதலில் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டு அடுத்தகட்ட பணிகள் தொடங்கும் என்று தெரிகிறது. அந்த கூடுதல் டி.ஜி.பி. யார் என்றும் முடிவு செய்யப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.

மேலும் செய்திகள்