சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆஜர்

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்காக அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார்கள்.

Update: 2021-08-27 21:52 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

தற்போதைய தி.மு.க. அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக சாத்தூர் ராமச்சந்திரனும், தொழில்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும் அங்கம் வகிக்கின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள், தி.மு.க. மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர்.

இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக கடந்த 2011-ம் ஆண்டு விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது.

அமைச்சர்கள் ஆஜர்

இந்த வழக்கு விசாரணை நேற்று நடந்தது. அப்போது அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களுடைய குடும்பத்தினருடன் வந்து, கோர்ட்டில் ஆஜரானார்கள்.

நீதிபதி கந்தகுமார் விசாரணை நடத்தினார். பின்னர் அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஒரே நேரத்தில் 2 அமைச்சர்கள் கோர்ட்டில் ஆஜராக குடும்பத்துடன் வந்ததால் கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்