தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே கொண்டு வரப்பட்டுள்ளன மத்திய அரசு ஐகோர்ட்டில் பதில்

தகவல் தொழில்நுட்ப புதிய விதிகள் சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே கொண்டுவரப்பட்டுள்ளன என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

Update: 2021-09-03 20:25 GMT
சென்னை,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்பம் புதிய விதிகள் 2021-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த விதிகளை செல்லாது என அறிவிக்கக்கோரி கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் அதன் துணை செயலாளர் அமரேந்தர் சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒழுங்குபடுத்தும் வகையில் சட்டம்

அதில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல், இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

முழு அதிகாரம்

சமூக வலைதளங்களில் ஆட்சேபனைக்குரிய பதிவை அரசோ அல்லது நீதிமன்றமோ தான் நீக்கும் வகையில் இருந்த விதிகளை மாற்றி, சம்பந்தப்பட்ட வெளியீட்டு நிறுவனங்களே முடக்கும் வகையில் விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற விதிகளை கொண்டுவர அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த புதிய சட்டம் அரசியல் சாசன விதிகளை மீறவில்லை. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, விசாரணையை 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.

மேலும் செய்திகள்