ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க வேண்டும்; அனைத்து கட்சியினரும் கோரிக்கை

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் இரவு 7 மணி வரை இருப்பதை மாலை 6 மணியாக குறைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர்.

Update: 2021-09-06 23:26 GMT
புதிய மாவட்டங்கள் பிரிப்பு மற்றும் வார்டு வரையறை உள்ளிட்ட காரணங்களால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இங்கு தேர்தல் நடத்த தற்போது மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது.இந்த தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கட்சி பிரதிநிதிகள்
கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.சுந்தரவல்லி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குனர் பிரவின் பி.நாயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.மு.க. சார்பில் க.சுந்தர் எம்.எல்.ஏ., வக்கீல் பிரிவு செயலாளர் கிரிராஜன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை குழு உறுப்பினர் கராத்தே தியாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் பால்கனகராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் தாமோதரன், நவாஸ், தே.மு.தி.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, வக்கீல் வி.டி.பாலாஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆறுமுகநயினார், சங்கர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மு.வீரபாண்டியன், எஸ்.ஏழுமலை, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாரதி தாசன், அடைக்கல ராஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏ.எம்.ஹக்கீம், மணிசங்கர், தேசியவாத காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் சாரதி, தேசிய மக்கள் கட்சி சார்பில் சி.ஆர்.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாக்குப்பதிவு நேரத்தை குறையுங்கள்
சுமார் ஒரு மணி நேரம் நடந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர் பல்வேறு ஆலோசனைகளை கூறி உள்ளனர். குறிப்பாக, 9 மாவட்டங்களிலும் நேர்மையாகவும், நியாயமாகவும், சுதந்திரமாகவும், அமைதியாகவும், வெளிப்படை தன்மையுடனும் தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் உறுதுணையாக இருக்கும். அதேநேரம் 9 மாவட்டங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அவற்றில் பொதுமக்கள் அச்சமின்றி ஓட்டுப்போட கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அதேபோல் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணி வரை என்பது தேவையில்லை. மாறாக காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மட்டும் போதுமானது.

3 அடுக்கு பாதுகாப்பு
அதேபோல் வாக்கு எண்ணும் இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைத்து கொரோனா பரவலை தடுக்க அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.தேர்தல் ஆணையம் தனித்துவமாக செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தும் ஒரு சில மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்தி சட்டசபையில் அறிவிப்புகள் வெளியான நிலையில், இதுகுறித்து ஆணையம் முறையாக தெளிவுப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் கூட்டத்தில் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டத்தில் முதன்மை தேர்தல் அலுவலர் (ஊராட்சிகள்) க.அருண்மணி, முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) கு.தனலட்சுமி, உதவி ஆணையர் (தேர்தல்) ஸ்ரீசம்பத் உள்ளிட்ட ஆணைய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விரைவில் தேர்தல்
பின்னர் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு நடப்பில் உள்ள சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களைக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படும்.

கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும். அதற்கான ஒத்துழைப்பினை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்