புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு: அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை, அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2021-09-14 10:22 GMT
கோப்புப்படம்
சென்னை, 

அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கி ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கை தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் ஆஜராக இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடரலாம் என்றும், இருவரும் ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கின் மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தும் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தநிலையில், ஐகோர்ட்டில் விலக்கு பெற்றதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 16ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்