பிரபல ஜவுளி கடைகளில் 2-வது நாளாக சோதனை வணிகவரித்துறை அதிரடி நடவடிக்கை

பிரபல ஜவுளி கடைகளில் வணிகவரித்துறையினர் 2-வது நாளாக நேற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-15 19:06 GMT
சென்னை,

போலி ரசீது மூலமாக வரி ஏய்ப்பு நடைபெறுவது தொடர்பாக வணிக வரித்துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிரபல ஜவுளிக்கடைகளில் 132 இடங்களில் வணிக வரி அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்றும் தொடர்ந்தது.

தொடரும் சோதனை

இதுகுறித்து வணிக வரி அதிகாரிகள் கூறியதாவது:-

வரி ஏய்ப்பு செய்வதாக, பல்வேறு பெரிய ஜவுளி நிறுவனங்களின் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கணக்குகள் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டு வந்தன. இதில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கணக்கு தாக்கலுக்கும், வர்த்தகத்திற்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் இருந்தது தெரியவந்தது. எனவே, பிரபல ஜவுளிக்கடைகளில், சென்னை, மதுரை, கோவை, நெல்லை, சேலம் உள்பட 132 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

அவர்களின் இருப்புக்கும், விற்பனைக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. அத்துடன் லாபத்தைக் குறைத்து, வரி ஏய்ப்பு மற்றும் ரசீது வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. 2-வது நாளாக சோதனை தொடர்ந்தது. தேவையெனில் சோதனை நீடிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்