தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவேன் -புதிய கவர்னர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவேன் என பதவி ஏற்றுக்கொண்ட பின் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

Update: 2021-09-18 06:12 GMT
சென்னை,

தமிழ்நாட்டின் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். 1976-ம் ஆண்டு கேரள பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மத்திய அரசு உளவுப்பிரிவின் சிறப்பு இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய கவர்னராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்.என். ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்கள் பரிசளித்தார்.மேலும் சபாநாயகர் மற்றும் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

புதிய கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், தலைமை செயலாளர், அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் கலந்து கொண்டனர்.


பதவி ஏற்புக்கு பின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  கவர்னர் ஆர்.என். ரவி வணக்கம் என கூறி தொடங்கினார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு தமிழ்நாட்டில் உள்ளது. கவர்னர் பதவி என்பது விதிகளுக்கு உடபட்டது.  அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பேன்.  அரசின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளதால் என்னுடைய பொறுப்பை சிறப்பாக செய்வேன்.

என்னால் இயன்ற அளவு தமிழ்நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன். பாரம்பரியம், பண்பாடு மிக்க தமிழ்நாட்டின் கவர்னராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் நான் முயற்சி செய்ய இருக்கிறேன். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது அவசியம்.. தமிழக அரசு கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்டு கட்டுப்படுத்தியுள்ளது. தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில காலம் அவகாசம் தேவை என கூறினார்.

மேலும் செய்திகள்