‘போர்டு’ கம்பெனி விவகாரம்: சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம்

‘போர்டு’ கம்பெனி விவகாரம்: சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களுடன் கலந்தாய்வு கூட்டம்.

Update: 2021-09-22 19:16 GMT
சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் இயங்கி வரும் போர்டு மோட்டார் கம்பெனி லாபகரமாக செயல்படாததால் அடுத்த ஆண்டு (2022) முதல் தனது உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்து உள்ளது. இந்த கம்பெனியில் 2,638 நிரந்தர தொழிலாளர்களும், 1,421 ஒப்பந்தத்தொழிலாளர்களும், 262 பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்துக்கு நேரடியாக உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 75 பெருநிறுவனங்களும், 200-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்தநிலையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எதிர்பார்க்கப்படும் தாக்கம் குறித்து அறிய ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் வரும் காலங்களில் தங்களுடைய வியாபார யுக்திகளின் மூலம் பாதிப்புகளில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவில் மீண்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சுமார் 50 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், துறையின் செயலாளர் வி.அருண்ராய், தொழில் கமிஷனர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

மேலும் செய்திகள்