தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Update: 2021-10-04 23:50 GMT
சென்னை,

வங்க கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் என மொத்தம் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை (புதன்கிழமை) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல், நாளை மறுதினமும் (வியாழக்கிழமை), 8-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்