தாம்பரம், ஆவடி புதிய கமிஷனரக தனி அதிகாரிகள் செயல்பட அலுவலகங்கள் ஒதுக்கீடு டி.ஜி.பி. உத்தரவு

தாம்பரம், ஆவடி புதிய கமிஷனரக தனி அதிகாரிகள் செயல்பட அலுவலகங்கள் ஒதுக்கீடு டி.ஜி.பி. உத்தரவு.

Update: 2021-10-06 20:04 GMT
சென்னை,

சென்னை போலீஸ் 3-ஆக பிரிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், ஆவடி புதிய போலீஸ் கமிஷனரகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தின் தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி கமிஷனரகத்தின் தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய்ரத்தோர் பதவி ஏற்றுள்ளார்.

அவர்களுக்கு அலுவலகங்கள் ஒதுக்கீடு செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சைலேந்திரபாபு நேற்று தனது அலுவலகத்தில் தனிஅதிகாரிகள் எம்.ரவி, சந்தீப்ராய் ரத்தோர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.

தாம்பரம் கமிஷனரகத்தின் தனி அதிகாரி எம்.ரவி பரங்கிமலையில் உள்ள தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்திலும், ஆவடி கமிஷனரகத்தின் தனி அதிகாரி சந்தீப்ராய்ரத்தோர், அம்பத்தூரில் உள்ள மேற்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகத்திலும் உட்கார்ந்து பணியாற்றுவார்கள். அவர்கள் அலுவலகத்தில் பணியாற்ற அமைச்சு பணியாளர்கள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கார்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தலா 2 டிரைவர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். புதிய கமிஷனரகங்களின் எல்லைகள் பிரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள். மேலும் எல்லைகள் தொடர்பாக சமூகவலைதளங்களில் வரைபடம் வெளியாகி உள்ளது. அதுபற்றி இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்