தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் - அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் இந்த ஆண்டும் 45 லட்சம் டன்னுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Update: 2021-10-08 21:26 GMT
தஞ்சாவூர், 

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேற்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்கள், அரவை ஆலைகள், நெல் சேமிப்பு குடோன்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்தாண்டு தமிழகத்தில் நெல் கொள்முதல் 43 லட்சம் டன் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 45 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்தாண்டு கரும்பு சாகுபடி செய்த 1.5 லட்சம் விவசாயிகளுக்கு உரிய விலை, போதிய பணம் வழங்காத காரணத்தால், கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் பெருமளவில் நெல் சாகுபடிக்கு மாறிவிட்டனர்.

இதனால் நெல் சாகுபடியின் பரப்பளவு அதிகமாகியுள்ளது. கடந்த 5-ந் தேதி வரை கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்த விவசாயிகள் அனைவருக்கும் வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. நெல் விற்பனை செய்ய இணையவழி நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை காக்க வைக்காமல் கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளதால் அந்த முறை தற்போது பின்பற்றப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்