முந்திரி தொழிலாளி கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி. ரமேஷ் கோர்ட்டில் சரண் சிறையில் அடைக்கப்பட்டார்

முந்திரி தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2021-10-11 20:24 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் பணிக்குப்பத்தில் உள்ள கடலூர் எம்.பி. ரமேசுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கோவிந்தராசு (வயது 55) அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கைசி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன்(31), முந்திரி தொழிற்சாலை மேலாளர் கந்தவேல்(49) மற்றும் தொழிலாளர்கள் அல்லாபிச்சை(53), சுந்தர் என்கிற சுந்தர் ராஜ்(31), வினோத்(31) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த 9-ந்தேதி காலை நடராஜன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரமேஷ் எம்.பி.யை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

எம்.பி. சரண்

இந்த நிலையில் ரமேஷ் எம்.பி. நேற்று காலை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் சரண் அடைந்தார். அப்போது நீதிபதி கற்பகவல்லி பிறப்பித்த உத்தரவில், ரமேஷ் எம்.பி.யை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும், கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை செய்யவும், 13-ந்தேதி (நாளை) கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து ரமேஷ் எம்.பி.யை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரமேஷ் எம்.பி. கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ரமேஷ் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது. சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியில் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்