தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-10-11 21:00 GMT
சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணிக்காலியிடங்களை பூர்த்தி செய்தல், வார்டு மறுவரையறை குறித்த பணிகள், வாக்காளர் பட்டியல் தயாரித்தல், வாக்குச்சாவடிகளை கண்டறிதல், வாக்குப்பதிவு எந்திரங்களின் இருப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி வாக்குச்சாவடிகளுக்கான பொருட்கள் வாங்குதல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

முன்னேற்பாடு

இந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்க கேட்டுக்கொண்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்திட ஏதுவாக அனைத்து தேவையான முன்னேற்பாடுகளையும் விரைந்து மேற்கொள்ள மாநில தேர்தல் அலுவலர்களை மாநில தேர்தல் ஆணையர் கேட்டுக்கொண்டார்.

பயிற்சி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள பணியாளர்களில் மின்னணு வாக்குப்பதிவு எ்நதிரங்களை இயக்குவதில் அனுபவம் உள்ள 120 முதன்மை பயிற்றுனர்களுக்கான பயிற்சி மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று நடைபெற்றது.

முதன்மை பயிற்றுனர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் பணியாளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவதற்கு தகுந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில், தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகள்