கோவில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்காதது ஏன்? அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

கோவில்களில் எல்லா நாட்களிலும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்காதது ஏன்? என்று அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2021-10-12 23:09 GMT
மதுரை,

நெல்லை டவுன் மாரியம்மன் கோவிலில் தசரா விழாவை முன்னிட்டு வருகிற வெள்ளிக்கிழமை இரவில் மாரியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று வர அனுமதி வழங்க உத்தரவிட கோரி அந்த கோவில் செயலாளர் லெட்சுமணன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.

நீதிபதி கேள்வி

இதையடுத்து நீதிபதி, தமிழகத்தில் ஜவுளிக்கடைகள், சினிமா தியேட்டர்கள், மால்கள் போன்ற வணிக நிறுவனங்களை அனைத்து நாட்களிலும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் மட்டும் பக்தர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.

விசாரணை முடிவில், மனுதாரர் மனுவை நெல்லை மாவட்ட கலெக்டர் பரிசீலித்து வருகிற 14-ந்தேதிக்குள் (அதாவது நாளைக்குள்) உரிய முடிவை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்