வருவாய்-பேரிடர் மேலாண்மைத் துறைக்கான இணையதளங்கள்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வருவாய்த்துறை, துணை ஆட்சியர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்களுக்கான இணையதளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2021-10-13 08:28 GMT
சென்னை, 

வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம், துணை ஆட்சியர்களுக்கான வலைதளம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றைத் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2021) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கான www.cra.tn.gov.in என்ற வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம், https://www.cra.tn.gov.in/tnscs என்ற துணை ஆட்சியர்களுக்கான வலைதளம் மற்றும் https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்.

வருவாய்த் துறையானது மாநிலத்தின் நிர்வாக அமைப்புக்கு முதுகெலும்பாக உள்ளதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. அரசின் பல்வேறு சமூக, பொருளாதாரத் திட்டங்கள் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்க் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

வருவாய் நிர்வாக ஆணையரகத்திற்கான பிரத்யேக இணையதளம்

அந்த வகையில், மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்குப் பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்ற திட்டங்கள் வருவாய் நிர்வாக ஆணையரகம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் பயன்களை மக்கள் எளிதில் தெரிந்துகொண்டு பயனடைவதற்கு ஏதுவாக, வருவாய் நிர்வாக ஆணையரகத்தால், www.cra.tn.gov.in என்ற பிரத்யேக வருவாய் நிர்வாக ஆணையரக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், இவ்வலுவலகம் சம்பந்தப்பட்ட அரசுத் திட்டங்களின் விவரங்கள் மற்றும் அரசாணைகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் பயன்கள் குறித்து அறிந்துகொள்ளலாம்.

துணை ஆட்சியர்களுக்கான பிரத்யேக வலைதளம்

தமிழ்நாடு அரசின் குடிமைப் பணியின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்ய துணை ஆட்சியர்களுக்கான https://www.cra.tn.gov.in/tnscs என்ற பிரத்யேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அரசு விதிகள் மற்றும் சட்டங்கள், அரசால் அவ்வப்போது வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணி மாறுதல் மற்றும் பணி நியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்துகொள்ள இயலும்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம்

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கோட்ட / வட்ட அளவிலான பொது மாறுதல்கள் ஆண்டுதோறும் வருவாய்க் கோட்டாட்சியர் அளவிலும், மாவட்ட அளவிலான மாறுதல்கள் நிர்வாக நலன் கருதி, மாவட்ட ஆட்சியர் அளவிலும், மாவட்டங்களுக்கு இடையேயான ஒருவழி மாறுதல்கள் மற்றும் மனமொத்த இருவழி மாறுதல்கள் வருவாய் நிர்வாக ஆணையராலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இம்மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளைப் பரீசிலித்து, மாறுதல்களைத் தாமதமின்றியும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் வருவாய் நிர்வாக ஆணையரகத்தால், https://www.cra.tn.gov.in/vaotransfer என்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி மாறுதல் வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பணி மாறுதல்களைத் தாமதமின்றியும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்த இயலும். 

இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் திரு.க. பணீந்தர ரெட்டி, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் திரு.குமார் ஜெயந்த், இ.ஆ..ப., இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்) திருமதி இரா.சீத்தாலட்சுமி, இ.ஆ.ப., தேசிய தகவலியல் மையத்தின் மாநில தகவலியல் அலுவலர் திரு. சீனிவாச ராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்