நிலுவையில் உள்ள மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்கி தீர்வுகாண வேண்டும்

நிலுவையில் உள்ள மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்கி தீர்வுகாண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கணேசன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-10-13 22:22 GMT
சென்னை,

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயல்பாடுகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வு கூட்டம் சென்னை தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை தாங்கினார்.இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் கிர்லோஷ்குமார், முதன்மைச் செயலாளரும், தொழிலாளர் கமிஷனருமான அதுல் ஆனந்த், தொழிலாளர் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

15 நாட்களுக்குள் தீர்வு காணவேண்டும்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி சென்னையில் 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் 35 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்வகையில், நிலுவையில் உள்ள நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்கி தீர்வு காணுமாறு கணேசன் அறிவுறுத்தினார்.

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நிலுவையில் உள்ள பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதிய விண்ணப்பங்களின் மீதான நடவடிக்கையை 15 நாட்களுக்குள் முடித்திடுமாறும் அவர் அறிவுறுத்தினார். மேலும் தொழிலாளர் துறையின் நீதிசார், சமரசம், ஆய்வுப் பணிகளில் கண்டறியப்பட்ட நிலுவைகளை ஒரு மாதத்துக்குள் முடித்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தினார்.

எடையளவுகள்

நுகர்வோர் நலன் காத்திட சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் தொடர் ஆய்வுகள் குறிப்பாக, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இணங்க பொட்டல பொருட்களை அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைவிட கூடுதலாக விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டு, எடையளவுகள் உரிய காலத்துக்குள் முத்திரையிடப்படவேண்டும் என கணேசன் அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்